دانلود کتاب தமிழ் இசை இலக்கிய வரலாறு
by மு.அருணாச்சலம்
|
عنوان فارسی: فارسی, موسیقی, ادبیات, تاریخ, |
دانلود کتاب
جزییات کتاب
இந்த இசை இலக்கிய வரலாற்றில் எந்த செய்தியையும் மிகைப்படுத்திச் சொல்ல வில்லை. இதுவரையில் இசை அன்பர்களும் ஏனைய வாசகரும், பொதுமக்களும் தமிழில் சிறப்பான இசை இல்லை. ஏதோ தேவாரம் எல்லாம் இருந்தது. அது ஏதோ ஒதுவார்கள் தாளம் தட்டிக்கொண்டு பாடியது.அது இசையாகாது.இசையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது கருநாடக இசை என்று சொல்லப்படுவது. அது தியாகராச சுவாமிகளோடுதான் தொடங்கிற்று என்றே அனைவரும் கேட்டுப் பழகியிருக்கிறார்கள். யாரேனும் திருப்புகழ் என்றோ, நந்தனார் கீர்த்தனை என்றோ, காவடிச்சிந்து என்றோ சொன்னால் அதெல்லாம் வெறும் துக்கடா, கச்சேரிக்கு ஆகக்கூடிய இசை அன்று என்ற கருத்துத்தான் நிலவி வந்திருக்கிறது. தமிழ்ப்பாட்டு கீர்த்தனம் ஆகுமா? அது கச்சேரிக்குரிய முழுமையுடையதா? என்றெல்லாம் மக்கள் பெருத்த சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். இந்தநூல் முழுமையும் இப்படிப்பட்ட சந்தேகத்தை நீக்குவது ஒரு நோக்கம். அதைவிட முதன்மையான நோக்கம், கருநாடக சங்கீதம் என்று ஒன்று இல்லை. அந்தப் பெயரால் சொல்வதெல்லாம் தமிழிசைதான். தமிழிசையிலிருந்து வளர்ந்ததுதான் என்று எடுத்துக்காட்டுவதுதான் மற்றொரு நோக்கம். மறந்தும், மறைக்கப்பட்டும் போன உண்மையை மீண்டும் எடுத்துக் காட்டினால் அநேகருக்கு ஆச்சரியமாய் இருக்கும் நம்புவதுகூடக் கஷ்டமாயிருக்கும். இதனாலேயே உண்மை, உண்மை அல்லாமல் போகாது. இந்தநூலில் இசைச்செய்திகளை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டுவதுதான் நோக்கம், எந்தவொரு கருத்தும் மிகைப் படுத்தியோ, அபிமானத்தால் உயர்த்தியோ சொல்லப்பட்ட கருத்து அன்று.
இந்த நூலில் தியாகராச சுவாமிகளுக்கு உரிய மரியாதையும், பெருமையும் தரப்பட்டுள்ளது. தியாகராச சுவாமியின் இசைப்பெருமை தமிழிசையின் பெருமைதான் என்று நாம் பல இடங்களில் முயன்று இருக்கிறோம். இதை உரிய இடங்களில் விளக்கமாகக் காணலாம். அவர் காவேரிக்கரையிலிருந்த தமிழிசை ஒன்றைத்தான் அறிந்திருந்தார். அவர் காவேரிக்கரையிலும், திருவையாற்றுக்கோயில் மேளக்காரரிடமும் கற்றுக்கொண்ட இசையில் தமது தாய்மொழி தெலுங்குக் கீர்த்தனங்களைப் பாடினார். மொழி தெலுங்காயினும் அவர் பாடிய இசை ஒப்பற்ற தமிழிசைதான் என்பதை நாம் வற்புறுத்திச் சொல்லுகிறோம். தியாகராசருடைய பெருமை தமிழிசையின் பெருமையாகும். வேறு அபிமானத்தால், தியாகராசருடைய இசை தெலுங்கு இசை என்று சொல்லி அதைத் தாழ்த்த எண்ணுவது தமிழுக்கே செய்யும் துரோகம் என்றே நாம் எண்ணுகிறோம். இந்த நமது முடிவான நோக்கத்தை, படிப்போர் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.அபிமானத்தால் எழுதுவதெல்லாம் இசையாகாது. உயர்ந்த இசையும் ஆகாது. ஆனால் நெடுங்காலமாக வித்துவான்கள் கச்சேரி முழுமையும் தெலுங்குமயம் ஆக்கிவிட்ட ஒரே பாபகாரியத்தால் தமிழ்மொழியில் இசை மங்கிப்போயிற்று. மீண்டும் அதற்குப் புதிய ஒளி வரும்படிச் செய்ய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.அந்த உன்னததிலை வர சில தலைமுறைகள் ஆகக்கூடும். அதுவரையில், தியாகையர் தமிழிசையைத் தெலுங்கு மொழியில் பாடிய கீர்த்தனங்கள், இசையின் உயர்வை எடுத்துக்காட்டிக்கொண்டே இருக்கும்.
இப்புத்தகம் தமிழ் இசை இலக்கிய வரலாற்றைக் கூறுவது; தமிழிசையின் வரலாற்றைக் கூறுவதன்று என்பதை நினைவில் வைக்கவேண்டும். அனேகர் இசையின் வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக, திரு. ரங்கராமானுஜ ஐயங்கார் எழுதிய தென்னிந்திய (கருநாடக) இசையின் வரலாறு என்ற பெருநூல் கருநாடக இசையின் வரலாற்றைக் கூறுவது. ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரமும் விபுலானந்தரின் யாழ்நூலும் ஆராய்ச்சிப் பெருநூல்கள். ஆனால் இசைவளர்ச்சியை ஆராய்கின்றன. திரு. கோதண்டபாணிப் பிள்ளையின் பழந்தமிழிசை என்ற நூலும், டாக்டர் இராமநாதனின் சிவப்பதிகாரத்து இசைத்தமிழ் என்ற நூலும் ஆராய்ச்சி நுட்பம் பொருந்திய சிறுநூல்கள்; தங்கள் அளவில் எடுத்துக்கொண்ட இசைப்பொருளை மட்டும் ஆய்கின்றவை. தமிழில் இசை இலக்கியம் தோன்றி நூற்றாண்டுதோறும் வளர்ந்து விரிந்த வரலாற்றை ஆராய்வதென்பது மேல்குறிப்பிட்ட நூல்களின் நோக்கமன்று.
ஆனால் தமிழ் இசை இலக்கிய வரலாறு என்ற இந்த வரலாற்று நூலின் நோக்கமே வேறு இயல் இலக்கிய வரலாறானது இலக்கியம் இலக்கணம் இவற்றின் வரலாற்றை முறையாகக் காலந்தோறும் ஆராய்ந்து, இவற்றின் பொருள் வளர்ச்சி, இலக்கண வளர்ச்சி முதலியவற்றை வரையறை செய்து கூறுவதுபோல, இந்த வரலாற்று நூல் இசை இலக்கியம், அது செய்தார், அதன் பொருள், அதன்போக்கு அது வளர்ந்தவிதம் ஆகிய தன்மைகளைத் தமிழின் தொடக்கக்காலம் முதலாக ஏறக்குறைய இருபது நூற்றாண்டுகளில் அதன் சரித்திரத்தையும், காலந்தோறும் இசை இலக்கியம் செய்து வளர்த்தார் வரலாற்றையும் நன்கு ஆராய்ந்து கூறுவதை நோக்கமாய்க் கொண்டது.