دانلود کتاب சங்கத் தமிழிசை
by த.கனகசபை
|
عنوان فارسی: انجمن های هندی |
دانلود کتاب
جزییات کتاب
சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுக்கால பழமையுடை யது. தமிழரின் வாழ்மரபுகள் சங்க இலக்கியத்தில் அகவாழ்வு முறையிலும் புறவாழ்வு முறையிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இன்று உலகத்தில் செவ்வியல் மொழிகளாக விளங்கி வருகின்ற கிரேக்கம் சீனம் போன்றவற்றில் படிந்துள்ள பழமையான இசைப் பகுதிகளுக்கு இணையாக இரண்டாயிர ஆண்டுக் காலத்திற்கும் முன் தொடங்கி தமிழிசையானது விளங்கி வருகிறது. சங்க காலத்தின் பழமையாக விளங்கும் இந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலம் என்பது தமிழர்கள் செவ்விசையை உச்சத்தில் உருவாக்கிக் கொண்டு வாழ்ந்த காலமாகும் செவ்விசையில் விளங்குகின்ற அலகு அதிர்வெண், கட்டம் பண்ணுப் பெயர்த்தல் போன்றவை இன்றைய நவீன அறிவியல் சார் ஒலிப்புகளும் ஒலி உருவாக்கங் களும் ஒலிச் சேர்ப்புகளும் சங்க இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகளாக வாழ்நிலைக்களமாக விளக்கமுறுவதை அறியலாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஒலியைச் செழுமைசெய்து இசையாக உருவாக்கி வாழ்ந்திருந்தது தமிழ்க்கூட்டம் என்றால், அதற்கான தொடக்கப்பகுதிகளாக விளங்கும் செயலிகள் அதன் முன்னர் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இவர்களால் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்? தமிழின் இசைக் குறிப்புகள் பத்துப்பாட்டு எட்டுத்தொகை தொல்காப்பியம் போன்றவற்றில் பொதிந்துள்ள பல்வேறு செய்திப் புலங்கள் வெளிப்படுத்தப்படும்போது ஆங்காங்கே இசைக்குறித்த பகுதிகளும் தனித்த இடத்தினைப் பெறுகின்றன. தமிழில் தனியாகவே பல இசைநூல்கள் இருந்ததாக இலக்கிய இலக்கணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதற்கான தனியாக எந்த ஒரு நூலும் முழுமையாகக் கிடைக்காதது அவற்றை அகலமாகவும் ஆழமாகவும் அறிந்து கொள்வதற்கான வழிமறைத்திருக்கின்றது. தமிழரின் ஒலியாற்றலைக் கண்டெடுத்துக் குறிப்பிடவும் இவ்வாற்றலை இவர்கள் இசைவுருவமாகப் பண்ணிய வகைகளையெல்லாம் பிறருக்குக் காட்டவும் தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட ஒலிச்சொத்துக்களின் எல்லைகளைக் கண்டறியவும் முழுமையாக இயலவில்லை. இந்நிலையில்தான் சங்கம் மருவிய கால இலக்கியமாகக் குறிப்பிடப்படுகின்ற சிலப்பதிகாரம் தூண்டாமணிவிளக்காய் ஒளிர்கிறது. இதில் இளங்கோவடிகள் பழமையான இசைமரபுகளை வெகுவாக மீட்டெடுத்துள்ளார். சங்க இலக்கிய இசையை உள்வாங்கி தாம் படைத்த பாத்திரங்களின் வழியாக அதற்கு உயிரூட்டியுள்ளார் இதற்கு உரையாசிரியர்களாக விளங்குகின்ற அரும்பதவுரை யாசிரியர் அடியார்க்கு நல்லார் ஆகிய இருவரும் இளங்கோவடிகள் காட்டிய வழியில் நின்று, சமகால இசைப் போக்குகளை உள்வாங்கிப் படைத்திருக்கும் பேருரைகள், சங்கத் தமிழிசையைச் சிலப்பதிகாரத்தின் கண்கொண்டு பார்ப்பதற்கான வழிகளைத் திறந்துவிடுகின்றன. சங்கத் தமிழிசையை உள்வாங்கி விரித்துரைக்கும் சிலப்பதி காரம் ஒர் இசைப்பனுவல் என்ற நிலையில் முழுமை பெற்று விளங்குவதைத் தமிழர்கள் தரணியெங்கும் பரப்பவேண்டும்.
சற்றேறக்குறைய தொண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னர் மு. ஆபிரகாம் பண்டிதரால் தம் கருணா மிர்தசாகரம் என்ற பெருநூலின் வழியாக நிகழ்த்தப்பட்டிருக்கிற ஆராய்ச்சியானது சிலப்பதிகாரத்திற்குப் பின்னர் அடுத்தகட்ட இசை வளர்ச்சியை ஆவணப்படுத்துகின்ற அரிய / பெரிய ஆய்வாக விளங்குகிறது. தமிழிசையை உலக அரங்குக்கு அதன் ஒப்பற்ற இசைப்பெரும் புலமையாளர்களின் வழியாக விளக்கமுறச் செய்திருப்பது பண்டிதரின் அளப்பரிய பணியாக விளங்குகிறது. பண்டிதரின் இப்பணியினால் தமிழிசை ஆராய்ச்சிக்கு அடைபட்டுக் கிடந்த சாளரம் திறக்கப்பட்டு புதிய காற்று வந்தது. சாமகானம் சங்கீத ரத்னாகரம் போன்றவை உருவாகவும் பரவலாக்கப்படவும் புகழ்ந்துரைக்கப்படுவதற்குமான சூழல்கள் உருவாகத் தமிழிசை அடித்தளமாகி பின் மண்ணுள் புதைந்த கதையைச் சாகரம் தம் இசைச் சொற்கட்டுகளால் கட்டுடைத்தது. தமிழரிடமிருந்து எடுத்துப்போன பண்டம் வண்ணம் தடவி உலகின் முன் அலங்கரித்துக் காட்டப்பட்டதை கருணாமிர்தம் கைகாட்டிற்று தமிழிசைச் சொற்களெல்லாம் பிறமொழிச் சொற்களாயின.
பல்லாண்டுகளாக பிற மொழிச் சொற்களிலேயே தமிழிசைப் புழங்கிக் கிடந்ததனால் தமிழுக்கென்று தனியாக ஒர் இசை இல்லை என்று வாய்கூசாமல் சிலர் வதந்தியைப் பரப்பினர் கருந்தமிழன் சிவப்பினைக் கண்டு ஏங்குகிற ஏக்கம் இசையிலும் வெளிப்பட்டது. பின் விபுலானந்த அடிகளார் வந்தார் நரம்புகளின் கருவியான யாழின் பல்வேறு வடிவம் குறித்து எண்ணினார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் யாழுக்குப் புதிய புதிய ஆடை கட்டிப் பார்த்ததால் புதுப்பொலிவாய் வீணை வந்தது. யாழ்குறித்த அடிகளாரின் ஆய்வுகளால் யாழையும் வீணையையும் ஒப்பிட்டுப் பார்க்க உலகம் தொடங்கியது. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. கந்தரேசனார், அடிகளார் வழியில் தமிழிசைக்கு மடித்துப் போட்ட துப்பட்டியாய்க் காலமெல்லாம் தொண்டாற்றினார். இசைப்பேரறிஞர் எஸ். இராமநாதன் உலக இசையால் தமிழிசை யையும் தமிழிசையால் உலகத்தையும் அளந்தார். சிலப்பதிகார ஆய்வில் வீழ்ந்து கட்டி கட்டியாய் முத்துக்கள் அள்ளினார். திரு கு கோதரண்டபாணிப் பிள்ளை "தமிழிசைப் பெருவளம் தந்தார். தமிழிசைக் களஞ்சியவேந்தர் வீப.கா. சுந்தரம் தமிழிசையில் கண்டெடுத்து காட்டியவை கொஞ்சமல்லவே! இப்படி இளங்கோவடிகள் தொடங்கி வீபகா வரை தமிழிசையானது வெளிக்கொணரப்பட்டுள்ளது. இவை இளைஞர்களிடம் சென்று சேரவேண்டும் மீண்டும் மீண்டும் சொல்லுவதும் திரும்பத் திரும்பிச் சிந்திப்பதும் விடுபடாமல் ஒரே ஒலிவட்டத்தில் உலாவந்து உறுதிப் படுத்துவதும் தமிழிசையில் புதிய திசைநோக்கிப் பயணிக்க உதவும் இதன் சின்னஞ் சிறு துளியாக சங்கத் தமிழிசை உலா வருகிறது.